தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1,400 புதிய டாக்டர்கள் மார்ச் 4–ந் தேதி நியமனம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வருகிற மார்ச் 4–ந் தேதி 1,400 புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது ரூ.30 லட்சம் செலவில் 5 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட டயாலிசிஸ் கருவிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இது போன்ற டயாலிசிஸ் கருவிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க வருகிற மார்ச் 4–ந் தேதி 1,400 புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை சென்னையில் தமிழக முதல்–அமைச்சர் வழங்க உள்ளார்.
அதேபோல் சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக புற்றுநோயை கண்டுபிடிக்கும் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க தமிழக முதல்–அமைச்சர் அனுமதி அளித்து உள்ளார். மேலும் இதற்காக ரூ.6 கோடி செலவில் புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.24 கோடி இதற்காக செலவு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
பேட்டியின் போது மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி டாக்டர் காமராஜ் எம்.பி., ஆத்தூர் சின்னத்தம்பி எம்.எல்.ஏ., கெங்கவல்லி மருதமுத்து எம்.எல்.ஏ., ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜுனன், தென்னரசு உள்பட ஏராளமான நிர்வாகிகளும், டாக்டர்களும் கலந்து கொண்டனர்.