அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி உருவானது ஏன்? தம்பிதுரை விளக்கம்


அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி உருவானது ஏன்? தம்பிதுரை விளக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 8:11 PM GMT)

அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி உருவானது ஏன்? என்று தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ரத்தினவேல் எம்.பி., மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது, கன்னி வடுகபட்டியில் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு கட்சிக்கும் என தனிக்கொள்கை இருக்கிறது. தேர்தல் கூட்டணிக்காகத்தான் சில கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வழக்கம். அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தார் என்பது நாம் அறிந்ததே. நாங்கள் இந்த கூட்டணி அமைப்பதற்கான காரணம் தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி உருவாக்கப்பட்டது.

2004-ல் பா.ஜனதாவுடனும், 2009-ல் பா.ம.க.வுடனும் கூட்டணி வைத்தோம். அதுபோலத்தான் காலத்திற்கேற்ப தேர்தல் கூட்டணி மாறும். நம் இனத்தையே அழித்த காங்கிரஸ், தி.மு.க வரக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்களை பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது. மீண்டும் மோடி ஆட்சி தான் வர இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story