அம்மாபேட்டையில் பரபரப்பு சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம்


அம்மாபேட்டையில் பரபரப்பு சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 9:15 PM GMT)

அம்மாபேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் பேரூராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை பேரூராட்சி பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் தார்சாலை மற்றும் சாக்கடை வடிகால் அமைக்க ரூ.1 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சாக்கடை கால்வாய் மற்றும் தார்சாலை அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அம்மாபேட்டை பகுதியில் உள்ள வீட்டுகளின் முன்பக்க சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் சாலையை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் பேரூராட்சி செயல் அதிகாரி வி.சரவணன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று அம்மாபேட்டை ஆதிதிராவிடர் காலனிக்கு வந்தனர். பின்னர் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீட்டின் முன்பக்க சுவர் மற்றும் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அம்மாபேட்டை பகுதியில் தற்போது சாலையை விரிவுபடுத்தி புதிதாக தார்சாலை மற்றும் சாக்கடை வடிகால் அமைக்கப்படுகிறது. இதில் ஒருசிலர் ரோட்டை ஆக்கிரமித்து வீட்டின் சுவர், மேற்கூரை மற்றும் படிக்கட்டுகள் கட்டி உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக அம்மாபேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திர உதவியுடன் இடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்படும். அதனால் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.


Next Story