சட்டங்களை படித்து எளியோருக்கு உதவுங்கள் மாணவ–மாணவிகளுக்கு நீதிபதி தமிழ்செல்வன் அறிவுரை


சட்டங்களை படித்து எளியோருக்கு உதவுங்கள் மாணவ–மாணவிகளுக்கு நீதிபதி தமிழ்செல்வன் அறிவுரை
x
தினத்தந்தி 23 Feb 2019 10:30 PM GMT (Updated: 23 Feb 2019 9:29 PM GMT)

‘சட்டங்களை படித்து எளியோருக்கு உதவுங்கள்‘ என்று மாணவ–மாணவிகளுக்கு நீதிபதி தமிழ்செல்வன் அறிவுரை வழங்கினார்.

கூடலூர்,

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திக் வரவேற்றார். முகாமில் கூடலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி தமிழ்செல்வன் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வுகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டம் எனக்கு தெரியாது என்று கூறுவதே சட்டப்படி தவறு ஆகும். சட்டப்படி வாழ வேண்டியது நமது கடமை. சட்டங்கள் மக்களை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபணம் ஆனால் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

தண்டிக்க வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம் அல்ல. தவறுகளை திருத்தி கொள்ளவும், மீண்டும் தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே நோக்கம். சட்டங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். சட்டம் குறித்த விழிப்புணர்வு இருந்தால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் சட்டத்தின் மூலம் பெற முடியும்.

சட்டம் தெரியாது அல்லது சட்டம் சம்பந்தமான விளக்கம் தேவைப்பட்டால் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகலாம். அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் தங்களின் வழக்குகளுக்கு வாதாட இலவச வக்கீல்கள் உதவியை நாடலாம்.

மாணவ–மாணவிகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். குறிப்பாக உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் குற்றம். இந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டால் எந்தவித இழப்பீடும் பெற முடியாது. சட்டங்களை சரியாக பயன்படுத்தினால் நாம் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.

வழக்கறிஞர்கள் மட்டுமின்றி மாணவ– மாணவிகளும் சட்டங்களை படித்து ஏழை, எளியோருக்கு உதவுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முகாமில் நீதிமன்ற தலைமை எழுத்தர் யோகராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு பொறுப்பாளர் மகேஷ், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், சமூக ஆர்வலர் மோகன், கல்லூரி பேராசிரியர் சண்முக சுந்தரம் உள்பட மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார்.


Next Story