ரெயில் நிலைய அதிகாரி- பெண் ஊழியரை மிரட்டி கொள்ளை: 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்


ரெயில் நிலைய அதிகாரி- பெண் ஊழியரை மிரட்டி கொள்ளை: 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:45 AM IST (Updated: 24 Feb 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் ரெயில் நிலைய அதிகாரி, பெண் ஊழியரை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கேரள வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நாகர்கோவில்,

இரணியல் ரெயில் நிலையத்தில் கடந்த 16-12-2006 அன்று ரெயில் நிலைய அதிகாரியாக செய்யது இப்ராகீமும், உதவியாளராக வசந்த குமாரியும் பணியில் இருந்தனர். அன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் ரெயில் நிலையத்துக்குள் புகுந்த கேரள மாநிலத்தை சேர்ந்த விமல்ராஜ் (வயது 32), ராகுல் என்ற மோனி (35), அனீஷ் (31), முகமது அசீம் (31), பிரமோத் (33), ரெஞ்சித் (32), அனீஷ் என்ற முகேஷ் (32) ஆகிய 7 பேர் சேர்ந்து ரெயில் நிலைய அதிகாரி அறைக்கதவை தட்டினர்.

அப்போது சத்தம் கேட்டு வந்த பெண் ஊழியர் வசந்தகுமாரியையும், ரெயில் நிலைய அதிகாரி செய்யது இப்ராகிமையும் கத்தியைக்காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு, சத்தம்போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு அங்கிருந்த ரூ.16 ஆயிரம் , வசந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 வாலிபர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 7 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பிறகு ராகுல் என்ற மோனியை தவிர மற்ற 6 பேருக்கு வழக்கு விசாரணையின்போது ஆஜராகி வந்தார்கள். ராகுல் மட்டும் ஆஜராகவில்லை. வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரைத்தவிர மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே போலீசார், ராகுல் பாஸ்போர்ட்டை முடக்கவும், ராகுலை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவு (இமிகிரேசன்) அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ராகுல் கடந்த 11-7-2018 அன்று நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் ராகுல் வந்திறங்கியதும் அவரை போலீசார் பிடித்து, ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் மும்பை சென்று ராகுலை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். பிறகு அவர்மீதான வழக்கு தனியாக நடந்தது. இந்த வழக்கை நீதிபதி வி.பாண்டியராஜன் விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது இரணியல் ரெயில் நிலையத்தில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் ராகுலுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமரன் ஆஜராகி வாதாடினார். ராகுல் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

Next Story