1–ந் தேதி சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விளக்க கூட்டம்


1–ந் தேதி சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 24 Feb 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

1–ந் தேதி சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விளக்கம் கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி,

போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக 1–ந் தேதி சம்பளம் வழங்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொள்ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக புதுப்பித்தல் பிரிவு முன் விளக்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பேரவை செயலாளர் ரத்தினவேல் தலைமை தாங்கி பேசினார். இதில் மண்டல தலைவர் பெரியசாமி, மத்திய சங்க செயலாளர் பாபு, துணை தலைவர் ஆகிமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. செல்வராஜ், எம்.எல்.எப். சண்முகம், சி.ஐ.டி.யூ. மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று போக்குவரத்து கழக கிளை 1, கிளை 2, கிளை 3 ஆகிய இடங்களிலும் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:–

மாதந்தோறும் 1–ந் தேதி சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆனால் கடந்த 1–ந் தேதி சம்பளம் வழங்கவில்லை. 6–ந் தேதி தொழில்நுட்ப பிரிவுக்கும், 10–ந் தேதி அலுவலர்களுக்கும், 15–ந் தேதி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் அந்த சம்பளத்தை முழுமையாக வழங்காமல், பாதி, பாதியாக வழங்கினார்கள். இதை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சேர்ந்து விளக்க கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

உதவியாளர் முதல் நிர்வாக மேலாண்மை இயக்குனர் வரை மாதந்தோறும் 1–ந் தேதி சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு 1–ந் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இனி 1–ந் தேதி சம்பளம் வழங்கவில்லை என்றால் 2–ந் தேதி பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story