என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் நிற்க துணிவு இல்லை அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் நிற்க துணிவு இல்லை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆணையின்படி முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை கழகம் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் தையல் எந்திரம், தட்டுவண்டி, ரிக்ஷா, கிரைண்டர், மின்சார அடுப்பு, இலவச புடவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்குகின்றனர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி பற்றி காங்கிரஸ் தலைவர்களும், அதன் கூட்டணி கட்சியினரும் குறைகூறி வருகின்றனர். அரசியலில் பல காலக்கட்டத்தில், பல்வேறு சூழ்நிலைகளில், பல கட்சிகள் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது என்பது ஜனநாயகத்தில் ஒன்று.
எங்களிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது மேல்சபை உறுப்பினரை என்.ஆர். காங்கிரஸ் கட்சி விட்டு கொடுத்தது. அதேபோல் நடைபெற்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவாக ரங்கசாமி வாக்கு சேகரித்தது. தற்போது புதுச்சேரி எம்.பி.யாக என்.ஆர். காங்கிரசை சேர்ந்தவர் உள்ளார். இதனால் எம்.பி. தொகுதியை என்.ஆர்.காங்கிரசுக்கு விட்டு கொடுத்துள்ளோம்.
தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சியினர் உளறுகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்தவுடன் காங்கிரசுக்கு தேர்தலில் நிற்க துணிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை காங்கிரசில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க நான், நீ என போட்டியிட்டு வந்தவர்கள் தற்போது விலகி கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பது என தெரியாமல் கவர்னர் அலுவலகம் முன் போராட்டம் என்ற பெயரில் 6 நாட்கள் கும்மாளம் அடித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மீண்டும் அறிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியை கலைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சிகள் விலை பேசுவதாக தனக்கு புகார் வந்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரம் என்ன? இந்த ஆட்சி அமைந்த காலம் முதல் 2 பேர் கட்சி மாறுகின்றனர், 3 பேர் கட்சி மாறுகின்றனர் என்ற தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. தகுதியற்றவர்களை எம்.எல்.ஏ.க்களாக ஆக்கியதால் காங்கிரஸ் கட்சிக்கு வந்த நிலை.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை குறுக்கு வழியில் எப்போதும் ஆட்சிக்கு வராது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ. பேரம் பேசினார் என்று கூறும் புகார்கள் பொய்யானது. அரசியல் கண்ணோட்டத்தோடு சபாநாயகர் வைத்திலிங்கம் செயல்பட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.