புதுச்சேரியில் பலமான கூட்டணி அமைத்துள்ளோம் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
மோடியை மீண்டும் பிரதமராக்க புதுச்சேரியில் பலமான கூட்டணியை அமைத்துள்ளதாக பா.ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
பா.ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதன்படி புதுவையில் 30 தொகுதிகளிலும் கருத்துபெட்டிகள் வைத்து மக்களின் கருத்துகள் பெறப்பட உள்ளன. இதற்கான கருத்துபெட்டிகள் தொகுதி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வருகிற 28–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் புதுவை நிர்வாகிகள் உள்பட 35 லட்சம் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்ற உள்ளார். புதுவையில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பலமான கூட்டணியை அமைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கை ஓங்கவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யார் போட்டியிடுவது? என்பது முக்கியமல்ல. மீண்டும் மோடி பிரதமர் ஆகவேண்டும் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக கமலஜோதி என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்றவர்கள் வீட்டின் முன்பு தாமரை கோலமிட்டு விளக்கேற்ற உள்ளோம்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.