இந்த ஆண்டு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் விரக்தி


இந்த ஆண்டு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் விரக்தி
x
தினத்தந்தி 23 Feb 2019 10:47 PM GMT (Updated: 23 Feb 2019 10:47 PM GMT)

இந்த ஆண்டு 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

திருப்பூர்,

தமிழக அரசு இந்த ஆண்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்று அறிவித்தது. பின்னர் ஓரிரு நாட்களில் பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

இந்த ஆண்டு 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதில் முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி மாவட்ட அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர். வட்டார கல்வி அலுவலர்கள் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை குறுவள மைய அளவில் தொகுத்து கூட்டத்துக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனவே ஆசிரியர்கள் அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு இந்த கூட்டத்துக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தோம். தற்போது 5, 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது என்ற அறிவிப்பால் நாங்கள் கடந்த சில நாட்கள் செய்து கொடுத்த பணிகள் அனைத்தும் வீணாகி விட்டதால் நாங்கள் விரக்தி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும் போது, “ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் 5, 8-ம் வகுப்புகளில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற விவரத்தை கொடுக்க 10 நிமிடங்கள் போதுமானது. இதற்காக ஆசிரியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை” என்றனர்.


Next Story