பஸ் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த வேண்டும் அரசுக்கு, மந்திரி டி.சி.தம்மண்ணா வலியுறுத்தல்
அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பஸ் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு, மந்திரி டி.சி.தம்மண்ணா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு,
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. விலை உயர்வு காரணமாக பெங்களூரு போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களில் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஏற்கனவே முதல்-மந்திரி குமாரசாமிக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பஸ் கட்டணம் உயர்த்துவதற்கு முதல்-மந்திரி குமாரசாமி இதுவரை அனுமதி வழங்கவில்லை. மாநிலத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஆனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் நஷ்டத்தில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழகங்களை மீட்க பஸ் கட்டணத்தை சராசரியாக 18 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து கழகங்கள் சார்பில் பஸ் கட்டணத்தை உயர்த்தும்படி அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பஸ் கட்டணத்தை உயர்த்த அவர் அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தூர பயணத்திற்காக சொகுசு பஸ்களும் வாங்கப்பட இருக்கிறது. குறிப்பாக படுக்கை வசதிகள் கொண்ட பஸ்கள் வாங்கப்பட உள்ளது. புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளதால், இதுவரை 8 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ள பழைய பஸ்களை போக்குவரத்து கழகங்களில் இருந்து விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. மண்டியா மாவட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவான வழக்குகளை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெற மாட்டாது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிடுமா? அல்லது காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமி, ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில தலைவர் விஸ்வநாத் இறுதி முடிவு எடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இவ்வாறு மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.
Related Tags :
Next Story