திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்


திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:33 AM IST (Updated: 24 Feb 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மையம் மற்றும் விழிப்புணர்வு நேரடி செயல் விளக்க கண்காட்சி திருப்பூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

கோடை மற்றும் குளிர்காலங்களில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், கலப்பட உணவு பொருட்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும், கலப்பட உணவுப்பொருட்களை உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருமாதம் இந்த கண்காட்சி அரங்கம் செயல்படும். தெருவோர தள்ளுவண்டி கடைகள், உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம் மற்றும் பழச்சாறு குளிர்பான கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களில் விவர சீட்டில் கவனிக்க வேண்டியவை குறித்த பதாகைகள் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கலப்படங்களை பொதுமக்கள் எளிதில் கண்டறிய வேண்டிய சோதனைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. உணவு வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள உணவு வணிகர்கள் 15 பேருக்கு உணவு பாதுகாப்புத்துறையின் உரிமத்தை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story