சரத்பவார் முன்னிலையில் கட்சி பிரமுகர்கள் மோதல் மாதா தொகுதியில் பரபரப்பு
சரத்பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறிவித்து இருந்தார். மாதா நாடாளுமன்ற தொகுதியில் நிலவி வரும் உள்கட்சி பூசலை ஒழித்து அங்குள்ள தலைவர்களை ஒன்று சேர்க்கும் வகையில் சரத்பவார் அங்கு போட்டியிட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் பல்தான் பகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது திடீரென இருதரப்பை சேர்ந்தவர்கள் சரத்பவார் முன்னிலையில் மோதி கொண்டனர். மேடையில் இருந்த சரத்பவார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். சரத்பவார் முன்னிலையிலேயே கட்சி பிரமுகர்கள் மோதி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரங்குக்குள் போலீசார் நுழைந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
மாதா தொகுதியில் முன்னாள் எம்.பி. விஜய்சிங் மோகிதே பாட்டீல் மற்றும் பிரபாகர் தேஷ்முக் இடையே மோதல் உள்ளது. இதில் பிரபாகர் தேஷ்முக்கின் ஆதரவாளரான கவிதா மேத்ரேவிற்கு சரத்பவாருடன் மேடையில் உட்கார வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்சிங் ஆதரவாளர் சேகர் கோரேவிற்கு மேடையில் உட்கார வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சேகர் கோரே கூறுகையில், ‘பிரபாகர் தேஷ்முக் உடன் தான் எனக்கு பிரச்சினை. அவர் நான் சரத்பவாரை சந்தித்து இங்கே நிலவும் பிரச்சினைகளை சொல்லவிடாமல் தடுக்கிறார்’ என்றார்.
ஆனால் சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
Related Tags :
Next Story