7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனை கைதி சிறையில் அடைப்பு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனை கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 55). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தகராறில் ஆறுமுகத்தை ராசு அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கடந்த 18.8.2009–ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் விரைவு நீதிமன்றம் ராசுவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து ராசு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்தார். அதன் பேரில் பிணைய கைதியாக வெளிவந்து 3 ஆண்டுகள் ராமநாதபுரம் விரைவு கோர்ட்டில் கையெழுத்துப்போட்டு வந்தார். அதன்பிறகு முறையாக கோர்ட்டுக்கு வராமல் கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவானார். இதையடுத்து 19.1.2019–ந்தேதி மதுரை ஐகோர்டு தலைமறைவாக இருந்த ராசுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் திருவாடானை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அறிவழகன் ஆலோசனையின்படி ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமன், ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் பிரகாஷ், மாடசாமி ஆகிய அடங்கிய தனிப்படை போலீசார் ராசுவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராசு திருவேகம்பத்தூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி, சி.கே.மங்கலத்தில் லாரியில் லோடு இறக்கும் வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் அங்கு சென்று ராசுவை கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.