மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது


மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2019 11:34 PM GMT (Updated: 23 Feb 2019 11:34 PM GMT)

மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள், தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

தாதர் மேற்கு, சிவாஜி பார்க் பகுதியில் உள்ள குருகிருபா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுஜிதா (வயது48). இவரது அக்காள் வினிதா (50). நேற்று முன்தினம் மதியம் இப்ராகிம் ஷா (28) என்ற வாலிபர் சுஜிதாவிற்கு வந்த கூரியா் பாா்சலை டெலிவரி செய்ய வந்தார்.

அப்போது அந்த வாலிபர் சுஜிதாவின் வீட்டு கதவை தட்டி கூரியர் வந்துள்ளதாக இந்தியில் கூறியுள்ளார். கதவை திறந்த சுஜிதா மராத்தியில் பேசுமாறு அந்த வாலிபரிடம் கூறினார். அதற்கு அந்த வாலிபர், என்ன அறிவு கெட்டத்தனம், நான் இந்தியன், மராட்டியம் இந்தியாவில் தான் உள்ளது என பதில் அளித்தார். அதற்கு சுஜிதா, சரிதான். ஆனால் தற்போது நீ மராட்டியத்தில் இருக்கிறாய், எனவே மராத்தியில் பேசு என அறிவுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில் அங்கு வந்த வினிதா, கூரியர் பார்சலை அவரிடம் வாங்காதே என்றும் வாலிபரின் செயல் குறித்து கூரியர் நிறுவனத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தங்கை சுஜிதாவிடம் கூறினார். இதையடுத்து சுஜிதா இப்ராகிம் ஷாவையும், அவர் கொண்டு வந்த கூரியர் பார்சலின் ரசீதையும் படம் பிடித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சுஜிதாவின் தலையில் ஓங்கி குத்தினார். மேலும் தடுக்க முயன்ற வினிதாவின் முகத்தில் கையில் இருந்த பேனாவால் குத்தினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கூரியர் நிறுவன ஊழியரை பிடித்தனர். பின்னர் அவர் சிவாஜி பார்க் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரியர் நிறுவன ஊழியர் இப்ராகிம் ஷாவை கைது செய்தனர்.

Next Story