ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்துவதாக மிரட்டல் மும்பை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு பயணிகளிடம் தீவிர சோதனை


ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்துவதாக மிரட்டல் மும்பை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு பயணிகளிடம் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 Feb 2019 5:00 AM IST (Updated: 24 Feb 2019 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து மும்பை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்துக்கு நேற்று மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக கூறி விட்டு தொடர்பை துண்டித்தார்.

இந்த மிரட்டலை அடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்றிருந்த அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

விமான நிலையத்துக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகள், பார்வையாளர்களிடம் கெடுபிடி காட்டப்பட்டது. அவர்கள் தீவிரமான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சரக்குகள், பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படுவதை தடுக்கும் விதமாக விமான நிலைய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் உள்ளூர் உளவுத்துறை தகவலை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மிரட்டல் காரணமாக விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த மிரட்டல் எதிரொலியாக விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர்.

இந்தநிலையில் முக்கிய நகரங்களில் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதையடுத்து மும்பையில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விமான கடத்தல் மிரட்டல் வந்திருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story