உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 24 Feb 2019 6:35 AM GMT (Updated: 24 Feb 2019 6:35 AM GMT)

அந்த இளைஞர் சுறுசுறுப்பானவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலே படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர். ஆனால் நடனத்தின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது.

ந்த இளைஞர் சுறுசுறுப்பானவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலே படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர். ஆனால் நடனத்தின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. அதனால் டெலிவிஷனில் நடக்கும் நடனப்போட்டிகளைப் பார்த்து, அதில் ஆடும் போட்டியாளர்கள்போல் தானும் ஆடிப்பழகினார். நன்றாகவே நடனம் ஆடியதால் உள்ளூர் விழாக்களில் ஆடவைத்து, அங்குள்ள மக்கள் அவரது நடனத்தை ரசித்தனர். ‘நல்லாவே ஆடுறான்’ என்ற பெயர் மட்டுமே அதன் மூலம் கிடைத்தது. வயது அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முன்னேற்றத்துக்கான வழி எது என்று தெரியாமல் அவர் முடங்கிப்போயிருந்த நேரத்தில் பக்கத்து கிராமத்து பெண்ணின் காதல் பார்வை அவர் மீது விழுந்தது. காதல் தூதுவிட்ட அவளிடம் அவர், ‘என் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது. அடுத்து என்ன செய்யுறதுன்னு தெரியாமல் நானே தவிக்க.. நீயும் என்னோடு வந்து கஷ்டப்படப்போகிறாயா?’ என்று கண்கலங்கினார்.

அவள், சோர்ந்து போயிருந்த அவருக்கு நம்பிக்கையூட்டினாள். ஐந்தும், பத்துமாக தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை எல்லாம் கொடுத்து ‘பெருநகரத்துக்கு போ.. கடுமையாக முயற்சிபண்ணு.. எப்படியாவது உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை பலமாக பிடிச்சி நீயும் திறமைசாலிதான்னு நிரூபிச்சுடு. உன்னால முடியும். நீ ஒரு நல்ல நிலைக்கு வர்றது வரை நான் என்னால முடிஞ்ச அளவு இங்கேயிருந்து பணம் அனுப்பிக்கிட்டே இருப்பேன். எப்படியாவது நீயும் ஜெயிப்பே.. நம்ம காதலும் ஜெயிக்கும்..’ என்று நம்பிக்கையூட்டி, அனுப்பிவைத்தாள்.

கிளம்பிச் சென்ற அவர் பல இடங்களில் வாய்ப்பு தேடினார். கிராமத்து காதலி அவ்வப்போது அனுப்பிக்கொடுத்த பணத்தில் தொடர்ந்து பயிற்சியும் பெற்றார். அப்போதுதான் அவருக்கு டெலிவிஷன் நடனப்போட்டி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோன்ற சில சாகசங்களையும் மேடையில்காட்டி, தனது நடனத் திறமையை நிரூபித்தார். பரிசு கிடைத்தது. வாய்ப்புகள் வரிசை கட்டி வந்தன. பணமும், புகழும் சேர்ந்தது.

பழசை மறக்காமல் தனது காதலியை தேடிச்சென்று திருமணம் செய்துகொண்டார். தனது வாழ்க்கையின் முழுவெற்றிக்கும் மனைவிதான் காரணம் என்றும் புகழாரம் சூட்டினார். அவள் தாய்மையடைந்தாள். பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்தாள்.

ஆறுமாதங்கள் கழித்து குழந்தையோடு, கணவர் வீட்டிற்கு திரும்பியவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் புது ‘இணைப்பு’ ஒன்றை சேர்த்துவைத்திருந்தார். அவள், அவரோடு அதே வீட்டிலே வசித்துவந்தாள். அவள் ஏற்கனவே திருமணமானவள். தற்போது கணவரைப் பிரிந்து வாழ்பவள். அழகும், அலட்டலும் கொண்ட அவள், இவளை ஒரு புழுவைப்போல பார்த்தாள். ‘இவ்வளவு பெயரும், புகழோடும் இருப்பவருக்கு உன்னைப்போல நாட்டுக்கட்டை எப்படி மனைவியாக இருக்க முடியும்? நான்தான் அதற்கு பொருத்தமாக இருப்பேன். உனக்கு கிராமத்தில் நிறைய நிலபுலன்களை வாங்கித் தர்றோம்.. அதில் விவசாயம் பண்ணிக்கிட்டு.. இவரோட மனைவி என்ற அந்தஸ்தோட அங்கேயே இருந்திடு’ என்றாள்.

அவளுக்கு அழுகை வந்தது. ‘தனது கண்ணீரை கணவன் துடைப்பான். தனக்கு ஆறுதல் சொல்லி, அந்த வைப்பாட்டியின் வாயை அடக்குவான்’ என்று அவள் எதிர்பார்த்தது, ஏமாற்றமானது. ‘அவள் சொல்வதுதான் சரி. உனக்கு தேவையானதை எல்லாம் நான் செய்து தந்திடுறேன். நீ கிராமத்துக்கே போயிடு. உன்னை நான் விவாகரத்து எல்லாம் பண்ணமாட்டேன். நீ தைரியமாக கிராமத்துக்கு போ..’ என்றார்.

உடனே அவள் ‘நீங்க அவங்ககூடவே இந்த வீட்டிலே குடும்பம் நடத்துங்க. நான் எந்த பிரச்சினையும் பண்ணமாட்டேன். உங்க அறை பக்கத்துலகூட வரமாட்டேன். தினமும் உங்க முகத்தை மட்டும் பார்க்கிறதுக்காக இந்த வீட்ல ஏதாவது ஓரமாக நான் வசிக்க மட்டும் அனுமதிகொடுங்க’ என்று கண்ணீர்விட்டு, அவர் காலில் விழுந்து கதறினாள். அவர் உதறித்தள்ளினார். போய்விடு என்றார்.

அவள் கதறி அழுதுகொண்டே ‘உருப்படமாட்டீங்க..’ என்று கூறிவிட்டு, குழந்தையோடு கிராமத்துக்கு போய்விட்டாள். அடுத்த சில நாட்களில் விபத்து ஒன்றில் சிக்கி அந்த நடனக்கலைஞர் பலியாகிவிட்டார்.

பெண் சாபம் பொல்லாததுன்னு பெரியவங்க சொல்லிவைச்சிருக்காங்க..!

- உஷாரு வரும்.

Next Story