ஈத்தாமொழியில் போலீசை கண்டித்து மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


ஈத்தாமொழியில் போலீசை கண்டித்து மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 10:45 PM GMT (Updated: 24 Feb 2019 4:41 PM GMT)

குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈத்தாமொழி,

ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைராவிளை, செம்பொன்கரை சந்திப்பு ஆகிய இடங்களில் நின்று கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கொடிக்கம்பங்கள் சில தினங்களுக்கு முன்பு இரவில் வெட்டி முறிக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் கட்சியின் ஒன்றியசெயலாளர் ராஜகுமார் என்பவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

ஆனால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலையில் கட்சி தொண்டர்கள் ஈத்தாமொழி சந்திப்பில் திரண்டனர். நிகழ்ச்சியில், ராஜாக்கமங்கலம் வட்டார செயலாளர் ராஜகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், செயலாளர் செல்லசுவாமி உள்பட பலர் பேசினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story