உத்தமபாளையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி
உத்தமபாளையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் கல்லூரி சாலையில் வசித்து வருபவர் அபுதாகீர் (வயது 52). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சவுகத்அலி. காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவிலுக்கு சொந்தமான கடையை சவுகத்அலி ஏலம் எடுத்து ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த கோவில் கடையை முறையாக ஏலம் நடத்தவில்லை என்று அபுதாகீர் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வந்தார்.
இதுதொடர்பாக அபுதா கீருக்கும், சவுகத் அலிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அபுதாகீர் குறித்து தவறாக கருத்துகளை பதிவிட்டு சுவரொட்டி அடித்து சவுகத்அலி ஒட்டியுள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் அபுதாகீர் புகார் செய்தார்.
இந்த நிலையில் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 7 மணியளவில் கல்லூரி சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அபுதாகீர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் கீழே இறங்கி வந்தார். பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபுதாகீரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story