சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் ரூ.13½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் ரூ.13½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
x
தினத்தந்தி 24 Feb 2019 10:15 PM GMT (Updated: 24 Feb 2019 5:20 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் சிங்கப்பூர், துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.13½ லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த சயூப் அலி (வயது 22) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அவரது உடைமைகளில் குழந்தைகள் விளையாடும் பொம்மை கார் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை பிரித்து பார்த்தபோது அதில் 13 தங்க தகடுகள் இருந்தது. மேலும் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

சயூப் அலியிடம் இருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 பேரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரம் வெளிநாட்டு விலை உயர்ந்த சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள், சவுதி ரியால்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல வந்த திருச்சியை சேர்ந்த இப்ராகிம் ஷா(45) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்த டிராலி சூட்கேசின் கைப்பிடிக்குள் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், சிங்கப்பூர், துபாய்க்கு கடத்தப்பட இருந்த இவை ஹவாலா பணமா?, அவற்றை யாருக்காக கடத்த முயன்றனர்? என பிடிபட்ட இப்ராகிம் ஷா உள்பட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story