காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் மரங்களை அதிகமாக நட வேண்டும்


காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் மரங்களை அதிகமாக நட வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:00 AM IST (Updated: 24 Feb 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் மரங்களை அதிகமாக நட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் வனக்கோட்டத்தில் சந்தனம், ரோஸ்வுட், தேக்கு, ஓமம், அயனிபலா உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் காட்டுயானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பிடித்தமான மூங்கில் மரங்களும் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வனப்பகுதியில் மூங்கில் மரங்கள் அதிகளவு இருந்தன. குறிப்பாக பாட்டவயல், பிதிர்காடு, சேரம்பாடி, நெலாக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் மூங்கில் காடுகள் இருந்தது. இதனால் காட்டுயானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக காட்டுயானைகள் பெரும்பாலும் ஊருக்குள் வரவில்லை. இந்த நிலையில் வயது முதிர்ச்சி காரணமாக பெரும்பாலான மூங்கில் மரங்கள் காய்ந்து விட்டன. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு காகித ஆலைகளுக்கு மூங்கில் மரங்களை வனத்துறையினர் வெட்டி லாரிகளில் அனுப்பி வைத்தனர். மேலும் மனிதர்களின் பயன்பாட்டுக்காக பெருமளவு மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் மூங்கில் மரங்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது. ஆனால் வெட்டிய மூங்கில் மரங்களுக்கு பதிலாக வனப்பகுதியில் மூங்கில் மரக்கன்றுகள் நடப்படவில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் காட்டுயானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் காட்டுயானை-மனித மோதல்கள் அதிகரித்து, உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் தொடர்கிறது. இதனை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் மரக்கன்றுகளை வனத்துறையினர் அதிகமாக நடவு செய்ய வேண்டும், தற்போது வனப்பகுதியில் உள்ள மூங்கில் மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடலூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நாள் முதலே காட்டுயானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து விட்டது. காட்டுயானைகளுக்கு மிகவும் பிடித்த உணவான மூங்கில் மரங்கள் வனப்பகுதியில் அதிகரித்தால் மட்டுமே ஊருக்குள் அவை புகுவதை தடுக்க முடியும். இதுதவிர யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், மின்வேலிகளை அகற்ற வேண்டும்.

தற்போது கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கூடலூர்- ஊட்டி சாலை மாக்கமூலா பகுதியில் மூங்கில் மரங்கள் பசுமையாக வளர்ந்துள்ளன. இந்த பகுதியிலும் மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டு வனத்துறை கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதனால் கூடலூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கூடலூர் வனப்பகுதியில் மூங்கில் மரக்கன்றுகளை அதிகமாக நடவு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பயனாக எதிர்காலத்தில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story