பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளையர்களை பந்தாடிய காளைகள் - 47 பேர் காயம்
உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையர்களை, காளைகள் பந்தாடியது. இதில் 47 பேர் காயமடைந்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் பல்லவராயன்பட்டியில் ஏழை காத்த அம்மன், வல்லடிகாரசாமி கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று காலை 8.30 மணிக்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் சீறிப்பாய்ந்தன. மேலும் காளைகளை பிடிக்க 450 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது.
இருப்பினும் காளையர்களின் பிடியில் சிக்காமல் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல காளைகள் பாய்ந்து சென்றன. இருந்தபோதிலும் வீரர்கள் சளைக்காமல் காளைகளை அடக்கினர். மேலும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இடையிடையே பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இதனால் துள்ளிக்குதித்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சலவை எந்திரம், கட்டில், பீரோ, உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் அ.தி.மு.க. சார்பில் துணைமுதல் -அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயரில் அண்டா பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் டி.டி.வி. தினகரன் சார்பில் குக்கர்கள் பரிசாக வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 47 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்து மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பல்லவராயன்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story