போலீசில் தஞ்சமடைந்த மாணவி, காதலனுடன் திடீர் கைது நகை மோசடி புகாரின் பேரில் நடவடிக்கை


போலீசில் தஞ்சமடைந்த மாணவி, காதலனுடன் திடீர் கைது நகை மோசடி புகாரின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2019 10:15 PM GMT (Updated: 24 Feb 2019 7:10 PM GMT)

களியக்காவிளை அருகே போலீசில் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி, காதலனுடன் கைது செய்யப்பட்டார். நகை மோசடி புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பளுகல் மூவோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் ஸ்ரீநயா (வயது 19) என்பவரை ஜெயகுமாரி தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஸ்ரீநயா களியக்காவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று நீட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற ஸ்ரீநயா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரம், வங்கி லாக்கர் சாவி, அதன் ரகசிய நம்பர் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தன.

இதுகுறித்து ஜெயகுமாரி பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்ரீநயாவும், பனச்சமூடு பகுதியை சேர்ந்த ஷாலு (23) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. அவருடன் ஸ்ரீநயா சென்றிருக்கலாம் என போலீசார் கருதி அவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி பளுகல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் காதல் ஜோடியை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஸ்ரீநயா மீது பாறசாலை போலீஸ் நிலையத்தில் வளர்ப்பு தாய் ஜெயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் நகை மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது. காதலனுடன் சென்றபோது, ஜெயகுமாரியின் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் உள்ள 30 பவுன் நகையை ஸ்ரீநயா எடுத்து சென்றுள்ளார்.

இவர் ஜெயகுமாரியுடன் அடிக்கடி வங்கிக்கு சென்று வருவதால், வங்கி ஊழியர்கள் நகையை எடுக்க அனுமதித்துள்ளனர். மேலும், வங்கி தரப்பிலும் நகை மோசடி செய்ததாக ஸ்ரீநயா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீநயா மீது நகை மோசடி புகார் இருப்பதால் காதல் ஜோடியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். காதல் ஜோடி இருவரும் நீதிபதியிடம் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினர். ஆனால், இருவரும் மேஜராக இருந்தாலும், ஸ்ரீநயா மீது நகை மோசடி வழக்கு இருப்பதால், நகை மோசடிக்கு காதலன் உடந்தையாக இருந்ததால் இருவரையும் பாறசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாறசாலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை போலீசார் நகை மோசடி புகாரின் பேரில் திடீரென கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story