பெண் மர்மச்சாவில் திடீர் திருப்பம், கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது


பெண் மர்மச்சாவில் திடீர் திருப்பம், கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

பெண் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கலைஞர் நகரை சேர்ந்தவர் சிவநேசன் (வயது 45). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் சமையல் பொடி பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் முகவராக உள்ளார். இவருடைய மனைவி உமாதேவி (40). இவர்களுக்கு பூங்குழலி (15) என்ற மகளும், ஹரீஷ் (8) என்ற மகனும் உள்ளனர். கடந்த 19-ந்தேதி வீட்டு மாடியில் உமாதேவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவர் சிவநேசனிடம் விசாரித்தனர். அப்போது உமாதேவிக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படும். சம்பவத்தன்றும் அதுபோல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் உமாதேவியின் தந்தை சுந்தரமூர்த்தி தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே பிரேத பரி சோதனை முடிவுகளும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் உமாதேவியின் மரணம் கழுத்து எலும்பு முறிவால் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உமாதேவியின் கணவர் சிவநேசனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மீண்டும் விசாரணை நடத்தினர்.

மேலும் அவருடைய தம்பியான முரளிதரனும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் சிவநேசனிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரித்தனர். அப்போது தனது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் கொலை செய்தது ஏன்? என்று அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகள் பூங்குழலிக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினோம். அப்போது உமாதேவியின் குடும்பத்தினருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் எனக்கும், என் மனைவிக்கும் இடையே அந்த பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 19-ந் தேதியும் அந்த பிரச்சினை தொடர்பாக என்னுடன் உமாதேவி தகராறில் ஈடுபட்டார். உடனே நான் எனது மாமனார் வீட்டுக்கு சென்று இதுதொடர்பாக தெரிவிக்கிறேன் என கூறி விருதுநகருக்கு புறப்பட்டேன். அப்போது என்னை உமாதேவி தடுத்தார். எனது கார் சாவியையும் பறித்துக்கொண்டு மாடிக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற நான் உமாதேவியை கீழே தள்ளிவிட்டு கழுத்தை நெறித்து கொன்றேன். பின்னர் வலிப்புநோயால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தேன். ஆனாலும் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர். மேலும் முரளிதரனுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முரளிதரனை போலீசார் விடுவித்தனர். பின்னர் சிவநேசனை கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story