மத்திய அரசு திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் 200 பேருக்கு உதவித்தொகை


மத்திய அரசு திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் 200 பேருக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 25 Feb 2019 4:00 AM IST (Updated: 25 Feb 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறு,குறு விவசாயிகள் 200 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

திண்டுக்கல், 

மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முதல்கட்டமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் பகுதியில் முதல் கட்டமாக சிறு,குறு விவசாயிகள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி 100 விவசாயிகளுக்கு உதவித்தொகைக் கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், 100 விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்படுகிறது. மேலும் விடுபட்ட விவசாயிகளை திட்டத்தில் சேர்ப்பதற்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதில் சிறு,குறு விவசாயிகள் பங்கேற்று விவரங்களை தெரிவித்து பயன்பெற வேண்டும், என்றார். இதையொட்டி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சி நடந்தது. இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் இடம்பெற்று இருந்தன. இதனை அதிகாரிகள், விவசாயிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர்கள் தமிழ்செல்வன், சாத்தப்பன், ரவிச்சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இதற்கு உதவி இயக்குனர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேபோல் பழனி தாலுகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 விவசாயிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தாசில்தார் சரவணக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் மீனாகுமாரி முன்னிலை வகித்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவிக் கான ஆணைகள் வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது.

நிலக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். தாசில்தார் நவநீதகிருஷ்ணன, நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் யாகப்பன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. 

Next Story