விதிகளுக்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை


விதிகளுக்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2019 3:45 AM IST (Updated: 25 Feb 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விளம்பர பதாகைகள் நெறிமுறைப்படுத்துதல் தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், நகராட்சி மண்டல பொறியாளர் முருகேசன், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு பேசியதாவது:-

விளம்பர பதாகைகள் நெறிமுறைப்படுத்துதல் மற்றும் அகற்றுவது தொடர்பாக அரசும், சென்னை ஐகோர்ட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விளம்பர பதாகைகள் நிறுவுதல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உரிய விதிகளை சுட்டிக்காட்டி பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளதை தமிழக அரசும், உள்ளாட்சித்துறையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும், இனி வருங்காலங்களிலாவது இருசக்கர வாகனம் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் விதமாக விளம்பர பதாகைகள் அமைக்கக் கூடாது.

அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக வைக்கப்படும் விளம்பர பதாகை உரிமையாளர்கள் மீது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும்.

சென்னை ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பித்த பிறகு விதிகளுக்கு உட்பட்ட இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். அவ்வாறு மாவட்ட நிர்வாக அனுமதி வழங்கப்படும் விவரத்தையும், அச்சிடப்படும் அச்சகதாரர் விவரத்தையும் விளம்பர பதாகையின் அடிப்பகுதியில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு அச்சடிக்கப்படாமல் இருந்தால். அவை அனுமதி வழங்கப்படாத பேனர் என கருதி உடனடியாக விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விளம்பர பேனர்கள் வைத்த நபர் மீதும் அதனை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக பொதுமக்கள் திருமணம், காதணி, பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கும், புதிதாக திரைப்படம் திரையிடும் போதும் அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இனி வருங்காலங்களில் இவ்வாறு அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைள் உடனடியாக அகற்றப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story