மத்திய அரசு திட்டத்தின்கீழ் 125 விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிதி உதவிக்கான சான்று வருவாய் அதிகாரி வழங்கினார்


மத்திய அரசு திட்டத்தின்கீழ் 125 விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிதி உதவிக்கான சான்று வருவாய் அதிகாரி வழங்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2019 11:00 PM GMT (Updated: 24 Feb 2019 8:36 PM GMT)

மத்திய அரசின் திட்டத்தின்கீழ் 125 விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிதி உதவிக்கான சான்றுகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி வழங்கினார்.

புதுக்கோட்டை,

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையான தலா ரூ.2 ஆயிரம் வழங்கி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதிக்கான சான்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி 125 விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான சான்றுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பாரத பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக, 4 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) வரையிலான சாகுபடி நிலங்களை உடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தகுதி உள்ள சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் கணக்கெடுக்கப்பட்டு நிதி உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையும், இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான சின்னத்தம்பி, வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, தோட்டக்கலை துணை இயக்குனர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சக்திவேல், 50 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான சான்றுகளை வழங்கினார். இதில் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகிராமன், கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் அலுவலர் ரங்கசாமி நன்றி கூறினார்.

Next Story