புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்


புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 924 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகளை மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பின்னர், ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது, பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அந்த நேரத்தில் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் அருகே நெருங்க விடாமல் வீரர்களை மிரட்டின.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர் போன்றவற்றில் வந்து கண்டு ரசித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Next Story