திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பால்குடம்-அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பால்குடம்-அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:00 AM IST (Updated: 25 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதேபோல, குழந்தை இல்லாமல் குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தையை எடுத்து வந்து மாரியம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி இரவு மாசி தேரோட்டம் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் 18-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

Next Story