உணவு டெலிவரி செய்தபோது தகராறு: தனியார் மருத்துவமனை டாக்டர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு


உணவு டெலிவரி செய்தபோது தகராறு: தனியார் மருத்துவமனை டாக்டர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Feb 2019 3:45 AM IST (Updated: 25 Feb 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உணவு டெலிவரி செய்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் மருத்துவமனை டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருச்சி,

திருச்சியில் ஆன்லைன் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது சமீபகாலமாக பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த சேவையில் பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி செய்பவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி தில்லைநகர் 10-வது குறுக்குச்சாலையில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் சந்தானகிருஷ்ணன்(வயது 32) நேற்று முன்தினம் காலை ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தார்.

திருச்சி வயலூர்ரோடு பேங்கர்ஸ் காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோசஸ் மகேந்திரன்(29) உணவினை கொண்டு சென்று மருத்துவமனையில் டாக்டரிடம் வழங்கினார். அப்போது உணவு பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் சட்னி குறைவாக இருந்தது. இது குறித்து டாக்டர் சந்தானகிருஷ்ணன் ஆட்சேபம் தெரிவித்தார். சட்னி குறைவாக உள்ளதால் உணவு வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக டாக்டருக்கும், மோசஸ் மகேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோசஸ் மகேந்திரன் தனது சகோதரர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேருடன் சென்று டாக்டரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனை கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயம் அடைந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தில்லைநகர் போலீசார் மோசஸ் மகேந்திரன், அவரது சகோதரர் கார்த்திக் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே டாக்டரும், அவரது சகோதரரும் தன்னை தாக்கியதாக மோசஸ் மகேந்திரன் தில்லைநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். புகாரின்பேரில், மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story