‘தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’


‘தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’
x
தினத்தந்தி 24 Feb 2019 11:30 PM GMT (Updated: 24 Feb 2019 10:34 PM GMT)

‘தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ என்று தூத்துக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி,


தூத்துக்குடியில் கருணை அறக்கட்டளை சார்பில் 6 ஆயிரம் பணியிடங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் புளோரா மேரி, அறக்கட்டளை நிறுவனர் இளம்மகிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறது. அப்போது ஒவ் வொரு கிராமத்திலும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை இல்லாமல் கஷ்டத்தில் இருப்பதாகவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கான சூழலை உருவாக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழலிலே நாங்கள் இல்லையென்றாலும், தற்போது உள்ள சூழலில் என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன. அதனை இளைஞர்கள் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு தான் இந்த வேலைவாய்ப்பு முகாம்.

அக்டோபர் 2010-ல் ஒரு வேலைவாய்ப்பு முகாம் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. அதில் 300 கம்பெனிகள் கலந்து கொண்டன. அப்போது 16 ஆயிரத்து 523 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இன்று அந்த அளவுக்கு பெரிய வேலைவாய்ப்பு முகாமாக நடத்த முடியாவிட்டாலும், சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் முன்னணி நிறுவனங்கள் வந்து உள்ளன.

எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரிய நிறுவனமாக இருக்கிறதே என்று தயங்க வேண்டியது இல்லை. உங்களை தேர்வு செய்வதற்காகத்தான் இங்கு வந்து உள்ளார்கள். இங்கு யாருடைய தலையீடும் இருக்காது. எந்த கட்சி சார்பிலும் நடக்கும் முகாமாக இல்லாமல், உங்கள் திறமைக்கு மட்டுமே தேர்வு என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தைரியமாக, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். வேலை கிடைக்கவில்லையென்றாலும், நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதனால் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

முகாமில் 75 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு முடித்த சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.யுடன், இளம் பெண்கள் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். 

Next Story