வனப்பகுதியில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
வனப்பகுதியில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு,
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. வனப்பகுதியில் தண்ணீரின்றி மரம், செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் விவசாய பயிர்கள் உள்பட பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரம், செடிகள் எரிந்து நாசமானது.
இந்த நிலையில் வனப்பகுதியில் யாராவது தீ வைப்பது தெரியவந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அங்கு மக்களால் தீ வைக்கப்படுவது தெரியவந்தது. ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் உள்ளன.
இதில் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், ஆசனூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக காடுகள் உள்ளன. அங்கு கிராம மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதாகவும், விறகுகள், தேன் சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இருந்தாலும், வனப்பகுதியில் தீ விபத்து நடந்து வருவதால் வனத்துக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வனப்பகுதியில் பவானி ஆறு, மாயாறு போன்ற நீர்வளமும் உள்ளது. எனவே வனப்பகுதியில் தீ வைக்கும் செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தீ வைப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.