பிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டத்தில் 350 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்
பிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டத்தில் 350 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
திருப்பூர்,
பிரதம மந்திரியின் கிஸான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு பயனாளிகள் விவரம் கடந்த 10 நாட்களாக சேகரிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை விவரம் சேகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணையாக நிதி வழங்குவதை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விழா நடைபெற்றது.
350 விவசாயிகளுக்கு முதல்கட்டமாக பிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணைத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. இதுவரை 46 ஆயிரத்து 750 விவசாயிகள் விவரம் கொடுத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை), 27–ந் தேதி ஆகிய 3 நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள், உதவி வேளாண் அதிகாரிகள், உதவி தோட்டக்கலை அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் பங்கு பெற்று புள்ளி விவரங்களை சேகரிக்க உள்ளனர்.
இந்த திட்டத்தில் இன்னும் புள்ளி விவரங்கள் கொடுக்காத விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா எண், ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், அனைத்து வேளாண்துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.
விழாவில் வேளாண்துறை இணை இயக்குனர் வளர்மதி, துணை இயக்குனர்கள் அரசப்பன், வடிவேல், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுகந்தி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.