ஈரோடு கோட்டை ஈஸ்வரன்–பெருமாள் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்களில் தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஈரோடு,
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன கோவில்கள் பட்டியலை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்திபெற்ற பழமையான கோவில்களான ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதனால் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, தொல்லியல்துறை முதுநிலை வல்லுனர் அர்ஜூனன், இளநிலை உதவியாளர் உத்திராடம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கோவில் வளாகம், கோபுரங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கருவறை ஆகியவை பழமை மாறாமல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தொல்லியல் துறை வல்லுனர் அர்ஜூனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு தொல்லியல் துறையின் சான்று பெற வேண்டும். இதற்காக தமிழகத்தில் கும்பாபிஷேகம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன கோவில்களின் பட்டியல் தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் மண்டலம் வாரியாக 10 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
கோவை மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்ட கோவில்களில் இன்று (நேற்று) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், மிக பழமையான கோவில்களில் கருங்கல்லால் கட்டப்பட்ட சுவரில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. சிமெண்ட் கலவை பூசக்கூடாது. விரிசல் இருந்தால் சுண்ணாம்புகளை கொண்டு பூச வேண்டும். புதிய கட்டுமானம் இருக்க கூடாது.
மேலும் நவீனம் என்ற பெயரில் கோவில் வளாகத்தில் டைல்ஸ் ஓட்டக்கூடாது. வர்ணம் பூசாமல் பழமையான முறையிலேயே கோவிலை பராமரிக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை முறையாக சீர்செய்த பின்னரே நாங்கள் சான்றிதழை அறநிலையத்துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து திண்டல் முருகன் கோவில், முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில், சூரம்பட்டி மாரியம்மன் கோவில், பிரப்ரோடு செல்வ விநாயகர் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, செயல் அலுவலர்கள் சீனிவாசன், கங்காதரன், முதுநிலை உதவியாளர்கள், கிருஷ்ணகுமார், சேஷய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.