காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை மறு அறிமுகம் செய்வோம் ப.சிதம்பரம் பேச்சு


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை மறு அறிமுகம் செய்வோம் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2019 5:15 AM IST (Updated: 25 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை மறு அறிமுகம் செய்வோம் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி கூட்டம் கேஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–

1971–ம்ஆண்டு முதல் கருணாநிதியும், இந்திராவும் இணைத்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இன்றும் தொடர்கிறது. இது இயற்கையான அணி. இட ஒதுக்கீடு தான் நமது ஆதாரக்கொள்கைகள். இந்த கொள்கைகள்தான் நம்மை இணைத்திருக்கின்றன. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அமைப்புகளால் பேராபத்து வந்திருக்கிறது. அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள், திருத்துவார்கள்.

மீண்டும் பா.ஜனதா ஆட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் இந்திய அரசியல் சாசனம் திருத்தப்படும். பல ஆதாரக்கொள்கைகள் குழிதோண்டி புதைக்கப்படும். இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்றுவது முதல் கடமை. நமக்கு எதிராக ஒரு அணி சேர்ந்திருக்கிறது. அதை அணி என்பதா, பிணி என்பதா என சொல்ல தெரியவில்லை.

தமிழக அமைச்சர்கள் மீது 216 பக்க ஊழல் பட்டியலை தமிழக கவர்னரிடம் பா.ம.க. வினர் அன்புமணி தலைமையில் புகார் மனு அளித்தனர். தற்போது ஊழல் குற்றம் சாட்டியவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்ததால் அதை ஊழல் கூட்டணி என ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை. இவர்கள் பா.ஜனதாவோடு கூட்டணி சேர்ந்ததில்தான் தவறிருக்கிறது.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி. நல்ல வழிமுறையை உடையது, நல்ல விதிகள் தான் ஜி.எஸ்.டி. ஆனால். பா.ஜனதா ஆட்சியில் ஜி.எஸ்.டி.யை சிதைத்து அவப்பெயரை பெற்றுத்தந்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை மறு ஆய்வு செய்து ஜி.எஸ்.டி. யை மறு அறிமுகம் செய்வோம்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 170 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதில் அனைத்து இடங்களிலும் ஜி.எஸ்.டி. முறையை ஒழித்துக் கொடுங்கள் என கேட்டுள்ளனர். 5 ஆண்டு ஓய்வுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி பிறந்திருக்கிறது, புதிய எழுச்சி பிறந்திருக்கிறது. மகத்தான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கனவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், புஷ்பராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், வித்யா கணபதி, ஜான்சிராணி கருப்பையா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளை மாநில பேச்சாளர் அப்பச்சி சபாபதி தொகுத்து வழங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் நன்றி கூறினார்.


Next Story