சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி
சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.
சிவகாசி,
பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் சார்பில் நேற்று காலை 7 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிவகாசி நகராட்சியின் அண்ணாமலை–உண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த போட்டி 3 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர், 1 கிலோ மீட்டர், ½ கிலோ மீட்டர் 4 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் மாணவ–மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி, தோல்வி இன்றி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
மாரத்தான் போட்டி நடைபெற்றதால் சிவகாசி பஸ் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சிவகாசி அரசன் குரூப் சேர்மன் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், ஸ்ரீபதி பேப்பல் மில் அதிபர் ரவிச்சந்திரன், ராஜ் கோ அதிபர் ரவி, ஜே.சி.ஐ. முன்னாள் மண்டல தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் சந்திரமோகன் மற்றும் விளையாட்டுதுறையை சேர்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகாசி ஜே.சி.ஐ. டைனமிக் தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முன்னதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.