மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்


மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2019 11:29 PM GMT (Updated: 24 Feb 2019 11:29 PM GMT)

உச்சிப்புளியில் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் திருமண உதவி தொகை மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் சமூகநலத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவை சார்பில் திருமண உதவி தொகை மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு 469 பயனாளிகளுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளையும், 82 மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதன் பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:– முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு பெண்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2018–19–ம் நிதியாண்டில் இதுவரை 3,180 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 49 லட்சம் மதிப்பில் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுஉள்ளது.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பிலும், மூக்கையூர் பகுதியில் ரூ.113 கோடி மதிப்பிலும் ஆழ்கடல் மீன்பிடி துறை அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளுக்கு நிவாரண தொகையாக படகுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 19 படகுகளுக்கு ரூ.95 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மீன்பிடி தடைக்காலம் மற்றும் மீன்பிடி குறைவு காலங்களில் மீனவர்கள் நலனுக்காக உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 50 சதவீதம் அரசு மானியத்தில் குளிர்சாதன பெட்டிகள், 40 சதவீதம் அரசு மானியத்தில் மீன்பிடி படகுகளுக்கு தேவையான எந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் மாணவ–மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 39 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 15½ லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் ராமேசுவரம் தீவுப்பகுதியில் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன்,உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர்கள் ராஜேந்திரன்,பெருங்குளம் ஜானகிராமன், மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்தாண்டி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story