ஜோலார்பேட்டையில் நின்று சென்ற மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு


ஜோலார்பேட்டையில் நின்று சென்ற மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 11:29 PM GMT (Updated: 24 Feb 2019 11:29 PM GMT)

சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று சென்றது. இதனை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

ஜோலார்பேட்டை,

சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி தினமும் இயக்கப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகள், ரெயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் அந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.வசுமதி சீனிவாசன் மூலமாக அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சென்னை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார். அதன்பேரில் அதிகாரிகள் ஆலோசனை செய்து, சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு மங்களூரு நோக்கி புறப்படும் இந்த ரெயில் இரவு 7.50 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், அதேபோன்று மறுமார்க்கமாக மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இந்த ரெயில் இனி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு முதன்முதலாக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.வசுமதி சீனிவாசன் தலைமை தாங்கினார். ரெயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி, ரெயில் நிலைய வணிக மேற்பார்வையாளர் பிரகாஷ்பாபு, உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக்வர்மா, ரெயில் நிலைய அதிகாரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் கலந்து கொண்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் ஆர்.ரமேஷ், கே.சி.அழகிரி, எஸ்.ஆர்.எம்.யூ. கிளை செயலாளர் மோகன், ரவிச்சந்திரன், முதுநிலை என்ஜினீயர் கணேசன், நகர அ.தி.மு.க. துணை செயலாளர் சண்முகம், பொருளாளர் கோவிந்தசாமி, இளைஞர் பாசறை செயலாளர் ஏழுமலை, மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story