மதுரை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 128 விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு
மதுரை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 128 விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதில் முதல் தவணையாக அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மதுரை,
நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. தகுதியான விவசாயிகளை கண்டறிந்து நிதி வழங்க வருவாய்த்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அவர்கள் விவசாயிகள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து பதிவு செய்துள்ளனர். அதில் தற்போது வரை 91 ஆயிரத்து 128 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இன்னும் சில கிராமங்களில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணி முடியவில்லை. அங்கு முடிந்த பின்பு தான் எத்தனை விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்பது தெரியவரும். தற்போது கண்டறியப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வரவு வைக்கப்பட்டு வருகிறது.