தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் - திருமாவளவன் பேட்டி


தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 10:45 PM GMT (Updated: 24 Feb 2019 11:48 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.

நெல்லை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

முதற்கட்டாக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி உடன்பாடு முடிந்தது. விரைவில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கூட்டணி தொகுதி பங்கீட்டுக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதில் எந்தவித தொய்வும் இல்லை. எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன். தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்து உள்ளது. பா.ம.க. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித வெற்றி வாய்ப்பும் கிடையாது. மாறாக அ.தி.மு.க., பா.ஜ.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு விழ வாய்ப்பு உண்டு.

தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குகிறது. அரசு கஜனாவில் இருந்து ஓட்டுக்காக மக்களிடம் பணம் கொடுப்பது போல் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு கவர்னர் தடை போடுகிறார். மோடி அரசு தேர்தல் நேரத்தில் கூட அவர்களை விடுவிக்க மறுக்கிறது.

முகிலன் மாயமானது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் கவனம் செலுத்தி காவல்துறைக்கு உரிஎய வழிகாட்ட வேண்டும். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி இருக்கிறார். அவர் உடல்நலம் பற்றி நேரில் விசாரித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story