ஜி.என்.பாளையம் ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி சவப்பாடை வைத்து ஆர்ப்பாட்டம்
ஜி.என்.பாளையம் ரெயில்வே கேட்டை மூடக்கூடாது என்றும் அதனை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் ரெயில்வே கேட் முன்பு சவப்பாடை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மூலக்குளம்,
வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஜி.என்.பாளையம் மற்றும் வெண்ணிசாமி நகர், நடராஜன் நகர், எழில்நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் யாராவது இறந்துவிட்டால் அவரது உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஜி.என்.பாளையம் ரெயில்வேகேட் வழியாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றாலும், தீ விபத்தை தடுக்க தீயணைப்பு வண்டி வரவேண்டுமென்றாலும் இந்த ரெயில்கேட் வழியாகத்தான் வர வேண்டும். இந்த நிலையில் இந்த ரெயில்வேகேட்டை நிரந்தரமாக மூடும் வகையில் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு ஜி.என்.பாளையம், வெண்ணிசாமி நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ரெயில்வேகேட் மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் ரெயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இதற்காக பலகட்ட போராட்டங்களாக அவர்கள் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ஜி.என்.பாளையம் ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி நேற்றுக்காலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்றுக்காலை அய்யனார் கோவில் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து சவப்பாடையுடன் ஊர்வலமாக புறப்பட்டு ரெயில்வே கேட்டுக்கு வந்தனர். அங்கு சவப்பாடையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.