பெருங்களூரில் அரசை எதிர்பார்க்காமல் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த இளைஞர்கள் கிராம மக்கள் பாராட்டு


பெருங்களூரில் அரசை எதிர்பார்க்காமல் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த இளைஞர்கள் கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 25 Feb 2019 12:00 AM GMT (Updated: 24 Feb 2019 11:57 PM GMT)

பெருங்களூர் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை அந்த பகுதி இளைஞர்கள் சுத்தம் செய்தனர். இதனால் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் அந்த இளைஞர்களை பாராட்டினர்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் மங்கலம் தொகுதி பெருங்களூர் கிராமத்தில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணல் துகள்கள் நிறைந்த சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குடிநீரை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள புதிய பறவைகள் நற்பணி மன்றத்தினர் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று அந்த நற்பணி மன்றத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மண்வெட்டி, பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களுடன் சென்ற சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்காக தொட்டியில் தேங்கி இருந்த குடிநீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். அதன்பிறகு தொட்டியின் உள்ளே இளைஞர்கள் இறங்கி அதில் தேங்கிக்கிடந்த மணல், பாசி உள்ளிட்டவற்ற் அகற்றினார்கள். அவர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களும் தேவையான உதவிகளை செய்தனர்.

இதனையடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தொட்டியில் சுத்தமான குடிநீர் நிரப்பப்பட்டு சுகாதாரமான முறையில் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்களும், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகமும் அந்த இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story