பெங்களூருவில் தொழில்அதிபர் காரில் ரூ.5 லட்சத்தை திருட முயற்சி திருச்சி வாலிபருக்கு தர்ம-அடி; 3 பேருக்கு வலைவீச்சு


பெங்களூருவில் தொழில்அதிபர் காரில் ரூ.5 லட்சத்தை திருட முயற்சி திருச்சி வாலிபருக்கு தர்ம-அடி; 3 பேருக்கு வலைவீச்சு
x

பெங்களூருவில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி தொழில்அதிபர் காரில் ரூ.5 லட்சத்தை திருட முயன்ற திருச்சி வாலிபரை, டிரைவர் பிடித்து தர்ம-அடி கொடுத்தார். இதில், தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வருபவர் கணேஷ், டிரைவர். இவர், தொழில்அதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் தனது உரிமையாளரை ஜெயநகர் 4-வது ஸ்டேஜிக்கு கணேஷ் காரில் அழைத்து வந்திருந்தார். அப்போது கணேசின் உரிமையாளர் தன்னிடம் இருந்த பணப்பையை காரின் பின்பக்க இருக்கையில் வைத்துவிட்டு நண்பரை பார்க்க சென்றார். அந்த பையில் ரூ.5 லட்சம் இருந்தது. அப்போது 4-வது ஸ்டேஜில் உள்ள கோவிலையொட்டி காரை நிறுத்திவிட்டு கணேஷ் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், கணேஷ் அருகே 10 ரூபாய் நோட்டுகளை வீசினார்கள். பின்னர் அந்த ரூபாய் நோட்டுகள் கணேசுக்கு உரியதா? என்று கேட்டு கணேசின் கவனத்தை திசை திருப்பினர். உடனே அவரும் தனக்கு அருகில் கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை கீழே குனிந்து எடுக்க முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் காரின் பின்பக்க இருக்கையில் ரூ.5 லட்சம் இருந்த பணப்பையை ஒரு மர்மநபர் எடுக்க முயன்றார். இதை பார்த்து கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சுதாரித்து கொண்ட அவர், மர்மநபரை மடக்கி பிடித்தார். இதனால் கணேசை தாக்கிவிட்டு மர்மநபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை கணேஷ் விடவில்லை. மாறாக அவருக்கு தர்ம-அடி கொடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் மர்மநபருடன் வந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில், பிடிபட்ட வாலிபர், ஜெயநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் தமிழ்நாடு திருச்சியை சேர்ந்த பிரதீப்(வயது 33) என்பதும், தப்பி ஓடியவர்கள் பெயர் சரவணன், தீனதயாள், யோகேஷ் என்றும் தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் பெங்களூரு நகரில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கார் டிரைவர் கணேஷ் சரியான நேரத்தில் பிரதீப்பை பிடித்ததால், தொழில்அதிபரின் ரூ.5 லட்சம் மர்மநபர்கள் கையில் சிக்காமல் தப்பியது. கைதான பிரதீப் மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story