தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்


தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 5:40 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார்.

நெல்லை, 

காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நேற்று நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் வரகனூரில் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினோம். அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பட்டாசு ஆலை தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை அவ்வப்போது குழு அமைத்து பார்வையிட வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் பலியான சவலாப்பேரியை சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறுதல் கூறினோம். புல்வாமா தாக்குதலை அரசியலாக்க கூடாது என்று ராகுல் காந்தி கூறிஉள்ளார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சியினர் இதை பெரும் அரசியலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பலியான ஒரு வீரர் குடும்பத்துக்கு கூட மோடி நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. மாறாக தாக்குதல் நடந்த பிறகு மோடி விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தேசத்துக்காக அவமரியாதை செய்யும் விதமாக உள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார். மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் தோல்வி அடைந்து விட்டது.

தமிழகத்தில் அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக உள்ளனர். அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் மக்கள் விரோத கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நல கூட்டணியை அமைத்து உள்ளோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதன் பிறகு ராகுல் காந்தி பிரதமராக நிச்சயம் பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அங்கு நடைபெற்ற காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு கலந்துரையாடல் கூட்டத்தில் சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் நவீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், ஜெயக்குமார், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story