பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிறைவு கவர்னர் வஜூபாய் வாலா பங்கேற்பு


பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிறைவு கவர்னர் வஜூபாய் வாலா பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Feb 2019 12:12 AM GMT (Updated: 25 Feb 2019 12:12 AM GMT)

5 நாட்கள் நடைபெற்ற 12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டார்.

பெங்களூரு,

ராணுவத்துறை சார்பில் 12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி ‘ஏரோ இந்தியா-2019’ பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

5 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 400-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் கலந்து கொண்டு, அரங்குகளை அமைத்திருந்தன. 60 விமானங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியின் முத்தாய்ப்பாக தினமும் காலை மற்றும் மாலை என மொத்தம் 4½ மணி நேரம் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விமான கண்காட்சி தொடக்க விழாவுக்கு முந்தைய நாள் சாகச ஒத்திகையின்போது, சூர்யகிரண் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சோகமான நிகழ்வுக்கு இடையே விமான கண்காட்சி 5 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

கடைசி நாளான நேற்று நிறைவு நாள் விழா எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் போர் விமான தொழில்நுட்பங்களை பெற, இந்த விமான சாகச நிகழ்ச்சி உதவியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை பார்க்கவும், கொண்டாடவும் மட்டுமே நடத்தவில்லை.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் ராணுவ பலம் இங்கு வெளிப்பட்டுள்ளது. போர் தளவாடங்களை விநியோகம் செய்ய இது வாய்ப்பாகும். நமது நாட்டு விமானங்கள் மற்றும் வெளிநாட்டு போர் விமானங்கள் சாகசம் புரிந்தன.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நமது ராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தியா, பணக்கார நாடாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சக்தி வாய்ந்த பலமான நாடு.

சக்தி இல்லாவிட்டாலும் சில நேரங்களில் அறிவாற்றல் இருக்க வேண்டியது அவசியம். நமது நாட்டில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) நாசா மையத்தை முந்தும் அளவுக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

ஒரே ராக்கெட்டில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே சாதிக்க முடியும்.

எச்.ஏ.எல். தயாரித்துள்ள சுகோய் மற்றும் தேஜஸ் போர் விமானங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை ஆகும். மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகிலேயே ‘குர்கா ரெஜிமண்ட்’ அதிக சக்தி வாய்ந்த படைப்பிரிவு ஆகும். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யும் இளைஞர்கள் நம்மிடம் உள்ளனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் தனியாராக இருக்கக்கூடாது. அது அரசு அமைப்புகளாக இருக்க வேண்டும்.

நமது எச்.ஏ.எல். நிறுவனம் தேஜஸ் விமானத்தை தயாரித்துள்ளது. அடுத்து எம்-22 விமானத்தையும் அந்த நிறுவனம் தயாரிக்கும். இஸ்ரோ அமைப்பு கர்நாடகத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு சவால்விட்டு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இது நமது நாட்டுக்கு கிடைத்த பெருமை ஆகும்.

இந்தியாவில் திறமைக்கு வாய்ப்பு கிடைப்பது சிறிது குறைவு தான். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு நற்பெயர் உள்ளது. வெளிநாடுகளில் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு அதிக செலவு செய்கிறார்கள்.

இந்த விஷயங்களில் நமது நாடும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் ராணுவத்திலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

சிறந்த ஆய்வுக்கட்டுரை, சிறந்த அரங்குகள், சிறப்பாக பணியாற்றிய விமானப்படை அதிகாரிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசை கவர்னர் வழங்கினார்.

தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பேசுகையில், “பெங்களூருவில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சில சோகமான சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆனால் அதில் உயிர்சேதம் ஏற்படவில்லை. பல்வேறு நிறுவனங்களுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த முறையும் விமான கண்காட்சி பெங்களூருவிலேயே நடைபெற வேண்டும்” என்றார்.

விழாவில் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட விமான நிறுவனங்கள், பிரியா விடைபெற்று சென்றன.

கடைசி நாளான நேற்று காலையிலும் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. சாரங், சூர்யகிரண், தேஜஸ், ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானத்தில் சாகசம் செய்து, பார்வையாளர்களை மகிழ்வடைய செய்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி 2021-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த முறை 2 சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. ஒன்று, கடந்த 19-ந் தேதி சாகச ஒத்திகையின்போது, 2 சூர்யகிரண் விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஒரு விமானி மரணம் அடைந்தார்.

மற்றொரு சம்பவம், நேற்று முன்தினம் வாகனம் நிறுத்தும் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டு சுமார் 278 கார்கள் எரிந்து சாம்பலானது. இது 12-வது விமான கண்காட்சிக்கு கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story