பெங்களூரு விமானப்படை தள தீவிபத்தில் 278 கார்கள் நாசம்: ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு


பெங்களூரு விமானப்படை தள தீவிபத்தில் 278 கார்கள் நாசம்: ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 25 Feb 2019 5:47 AM IST (Updated: 25 Feb 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது.

பெங்களூரு,

இந்த கண்காட்சியில் காலை மற்றும் மதிய நேரங்களில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகசத்தை பார்க்க கட்டணம் செலுத்தி பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த கண்காட்சியின் 4-வது நாளான நேற்று முன்தினம், விடுமுறை நாள் என்பதால் பெங்களூரு நகரவாசிகள், அதிகளவில் எலகங்காவில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான கார்கள், அந்த விமானப்படை தளம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விமானப்படை தளத்தின் 5-வது நுழைவாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பிடித்தது. ஒரு காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

இந்த தீவிபத்தில் சுமார் 300 கார்கள் எரிந்து நாசமாயின. அதில் இருந்த முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் வேகமாக செயல்பட்டு, தீயை அணைத்ததால், ஆயிரக்கணக்கான கார்கள், தீ விபத்தில் இருந்து தப்பின. இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை எலங்காவுக்கு வந்தார். அவர் விமானப்படை தள வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தீயில் உருக்குலைந்துபோன கார்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவரிடம் விமானப்படை அதிகாரிகள் தீவிபத்து குறித்து சில விவரங்களை எடுத்துக் கூறினர்.

குறிப்பாக தீவிபத்துக்கான காரணம் குறித்து அவரிடம் விளக்கினர். அதாவது, ஒரு காரின் புகை குழாயில் இருந்து அதிகப்படியான வெப்பம் வெளியேறி இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நிர்மலா சீதாராமனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால், தீ வேகமாக பரவி, சேதம் அதிகமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறி னர்.

தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூட்டாக இணைந்து செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் ெகாண்டு வந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தின்போது 16 கார்கள் எரிந்து முடிந்த நிலையில், 77 கார்கள் தீயின் வெப்பத்திற்கு கண்ணாடிகள் உடைந்து திறந்தது என்றும் அதிகாரிகள் கூறினர். மொத்தம் 278 கார்கள் சேதமடைந்து இருப்பதாக அவா்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களுக்கு உதவ சட்ட-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒரு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும், அதில் சான்றிதழ் பெற்று காப்பீட்டு தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சேதம் அடைந்த கார்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த சம்பவத்திற்கு ராணுவத்துறை மிகுந்த கவலையையும், பாதிக்கப்பட்டவர் களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

Next Story