திருவண்ணாமலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


திருவண்ணாமலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 9:50 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அஸ்வநாதசுரனை கிராமம் அருகில் உள்ள தானாமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரியும் ஒருவர் குடிபோதையில் அடிக்கடி அஸ்வநாதசுரனை பகுதியில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தகராறு செய்து ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வநாதசுரனை பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் தானாமேடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், டாஸ்மாக் கடை விற்பனையாளரை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை மறியலினால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story