கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணலை உடனே நடத்த வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு
ரத்து செய்யப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணலை உடனடியாக நடத்த வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக கொடுத்தனர்.
கூட்டத்தில், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 674 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், வேலூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் 67 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நிர்வாக காரணம் காரணமாக நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் ரத்து செய்யப்பட்ட நேர்காணல் மீண்டும் எப்போது நடக்கும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனவே கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் நடத்தும் தேதியை அறிவித்து, உடனடியாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
குடியாத்தம் அருகேயுள்ள மோட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பழனி (வயது 46) கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொந்தமான ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை விற்று மகளுக்கு ரூ.6 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தேன். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை 2 மகன்களுக்கு பிரித்து கொடுத்தேன்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் 2 மகன்களும் என்னை சரியாக கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அதனால் தங்க இடமின்றியும், உண்ண உணவு இன்றியும் சாலையில் படுத்து உறங்கி வருகிறேன். எனவே எனது மகன்களிடமிருந்து ரூ.6 லட்சத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பேரணாம்பட்டு அருகே உள்ள பக்காளபல்லியை சேர்ந்த பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், நாங்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம் எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்படி கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று விருதம்பட்டு பாலுநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மைய கட்டிடம் கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி திடக்கழிவு மேலாண்மை மையம் கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். கடந்த 6 மாதங்களாக 30-க்கும் மேற்பட்டோருக்கு கூலி வழங்கவில்லை. அதனை உடனடியாக வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற்ற 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள செவிலியர் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற்றவர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில், அரியானா மாநிலம் கோரக்பூரில் நடந்த பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைவுற்றோருக்கான ஜூடோ போட்டியில் தேசிய அளவில் 2, 3-ம் இடங்களை பிடித்த வேலூர் வீரர்கள் சான்றிதழ்களை காண்பித்து கலெக்டர் ராமனிடம் வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story