கோடை காலத்தை முன்னிட்டு காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி வனத்துறை ஏற்பாடு
கோடை காலத்தை முன்னிட்டு வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி,
தற்போது கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு வனப்பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வன விலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை மான் உள்ளிட்ட வன விலங்குகள் குடித்து வருகின்றன. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கடும் வறட்சி காலங்களில் தண்ணீருக்காக வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றன.
அப்போது மான் உள்ளிட்டவை நாய்களால் கடிக்கப்பட்டு இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதே போல மான்கள் ஊருக்குள் வரும் போது கிணற்றில் தவறி விழுந்து இறப்பது, சாலையில் வாகனத்தில் அடிபடுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் தொகரப்பள்ளி, நந்திபண்டா, வரட்டனப்பள்ளி, நொச்சிப்பட்டி, நாய்க்கனூர் காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story