அத்திக்குன்னா-தேவாலா சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்
அத்திக்குன்னா- தேவாலா சாலையில் வாகனங்களை காட்டுயானைகள் வழிமறித்தன.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அத்திக்குன்னா, அத்திமாநகர், தேவாலா அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. இதுதவிர விவசாய பயிர்களான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்கின்றன. வனப்பகுதிக்குள் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், விவசாய நிலங்களை தேடி காட்டுயானைகள் அதிகளவில் ஊருக்குள் வர தொடங்கி விட்டன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு தேவாலா அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 பகுதியில் தொழிலாளர்களின் வீடுகளை 8 காட்டுயானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் பீதியுடன் வீடுகளில் முடங்கினர். பின்னர் அனைவரும் இணைந்து தீப்பந்தங்களை காட்டி காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவை அங்கிருந்து இடம் பெயர்ந்தன.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு அத்திக்குன்னாவில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் காட்டுயானைகள் நின்றன. மேலும் வாகனங்களை அவை வழிமறித்ததால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் காட்டுயானைகள் நுழைந்தன.
அப்போது பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டுயானைகளை கண்டு பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டுயானைகள் அங்கிருந்து சென்றன. தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story