தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7½ அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமச்சந்திரன், செண்பகம், சந்தோஷ், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதாவின் உருவசிலைக்கு அவர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்த ஏழை, எளிய சாதாரண மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் அனைத்து விதமான வசதிகளையும் பெற்று வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். 11 ஆண்டு காலம் அவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். இந்த நிலையில் இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா 6 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்-அமைச்சராகவும், பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும் விளங்கினார். அவருக்கு யாரும் இல்லை. நாம்தான் அம்மாவின் பிள்ளைகள்.
தமிழக மக்களின் நலனுக்காக தனது உடல் நலத்தையும் பார்க்காமல் இரவு, பகலாக அயராது உழைத்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கே.பி.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இங்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலக கட்டிடத்தை அற்புதமாக கட்டினார். அந்த கட்டிடத்தை திறந்து வைத்த ஜெயலலிதா இதே வளாகத்தில் எம்.ஜி.ஆரின் உருவ சிலையையும் அப்போது திறந்து வைத்தார். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஜெயலலிதாவின் உருவ சிலையை திறந்து வைக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுத்ததற்காக அமைச்சர் கே.பிஅன்பழகனுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் தாங்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி ஏழை, எளிய மக்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்கள். இந்த 2 தலைவர்கள் வழிநடத்திய இந்த இயக்கத்தை எத்தனையோ இடர்பாடுகள் ஏற்பட்டாலும் கூட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளாகிய உங்கள் துணையோடு தகர்த்தெறிந்து செயல்படுவோம். தமிழ்நாட்டு மக்களும் நமக்கு ஆதரவு தருவார்கள். மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இந்த தேர்தல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நாம் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல். இந்த தேர்தலுக்காக பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். அ.தி.மு.க., பா.ம.க. ஆகியவை மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும் கட்சிகள். இந்த கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் வேறு கட்சிகள் இல்லை. நமது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் நமது கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சிங்காரம், என்.குப்புசாமி, மாதப்பன், மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் கே.பி.ஆனந்த், எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் மாவட்ட இணை செயலாளர் வருவான் வடிவேலன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், செல்வராஜ், பெரியண்ணன், குமார், வேலுமணி, மதிவாணன், கோபால், நகர செயலாளர் குருநாதன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் தகடூர் விஜயன், பழனிச்சாமி, சுமதி, மோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், செல்வராஜ், சம்பத்குமார், தர்மபுரி ஒன்றிய பேரவை இணை செயலாளர் மாரியப்பன், இளைஞரணி நிர்வாகி அதியமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே கட்சி கொடிகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நல்லம்பள்ளியில் இருந்து தர்மபுரி வரை சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். பச்சமுத்து பள்ளி அருகே காரில் இருந்து இறங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
ஜெயலலிதா சிலை திறப்பு விழா, அரூர் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தார். தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், உதவி கலெக்டர் சிவன்அருள் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு பூச்செண்டுகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.
இதேபோல் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் சேஷம்பட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பூச்செண்டு கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரிமோகன், வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாவட்ட தலைவர்கள் மதியழகன், செல்வக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story